8 எட்டு

https://www.youtube.com/watch?v=tSspKHYbPo4

எட்டுக்கு இணை ஏதுமில்லை! எட்டாம் நம்பர் சிறப்பு!!:

நம்மவர்களுக்கு எட்டு என்ற எண்ணைக் கேட்டாலே ஒரு பயம். 

அந்த எண்ணில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு அமைந்து விட்டாலோ எப்போது இது வெட்டுமோ? என்ற எண்ணம் வந்து வந்து பயமுறுத்தும். 

நாட்களிலே அஷ்டமி என்றால் ஐயோ! வேண்டாம் என்பார்கள். 

இன்னும் சிலருக்கு 8 என்ற எண்ணைப் பார்த்தாலே அச்சம். 

அதன் கோணலே அவர்களுக்குப் பிடிக்காது. 

சோதிடர்கள் ஒருவரிடம் உனக்கு அஷ்டமத்துச்சனி என்று சொல்லிவிட்டால் போதும், சனி அவரைப் பாடாய்ப் படுத்துகிறதோ இல்லையோ; அந்த அஷ்டமம் அவர்கள் மனத்தைப் பாடாய்ப் படுத்திவிடும். 

எட்டைப் பற்றிய உண்மையான செய்திகளைத் தெரிந்து கொண்டால் நம் வீணான அச்சம் தொலையும். 

எட்டின்மேல் நமக்குப் பாசம் வருகிறதோ இல்லையோ! ஆனால் ஒரு பக்தி தோன்றும். எண்ணிப்பார்த்தால் எல்லாமே எட்டுக்குள்தான் என்ற ஞானம் தோன்றும்.

மனிதப் பிறப்பில் எட்டாம் மாதம் ஒரு திருப்புமுனை. 

தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது. 

அப்போது கருப்பையில் இடம் போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்திற்கேற்பத் தன் கைகால்களை மடக்கிக் கொள்கிறது. 

தன் உடல் உறுப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முதல் அறிவை அப்போதுதான் அது பெறுகிறது. 

அப்போது அதன் கருப்பை வடிவம் 8 என்ற எண் வடிவம்.

சைவர்களின் திருமுறைகள் பன்னிரண்டு. 

அவற்றுள் எட்டாம் திருமுறை திருவாசகம். 

வார்த்தைகளுக்கு எட்டாத தெய்வ அனுபவத்தை முதன்முதலாக வார்த்தைகளில் வடித்துக் கொடுத்த ஒப்பற்ற நூல். 

கடல் போன்ற தமிழ் நூல்களில் ஆறு மிகச்சிறந்த நூல்களில் ஒன்று. 

அதனை இயற்றிய மாணிக்கவாசகர் கருப்பையில் நம் முதல் வடிவத்தை எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும் என்று கூறுகிறார். 

அந்த நெருக்கத்தில் சிக்கித் துன்புற்று இறந்து போகாமல் பிழைத்துப் பிறந்திருக்கிறோமே! 

இதற்கு நாம் எட்டிற்கு நன்றி சொல்ல வேண்டாமா!

எட்டு என்ற எண், ஆன்மீக உலகில் சிறப்படைந்து காணப்படுகிறது. 

பிறந்த தேதி எட்டாம் எண் உடையவர்கள் மிகவும் கஷ்டப் படுவார்கள் அல்லது ஆன்மீகத்தில் சிறந்து நிற்பார்கள். 

ஏனெனில் இது தன்னம்பிக்கை (Self Confidence), நிலைத்த (Stability) தன்மையின் சின்னம். 

மேலும் சனைச்சரனுக்கு (சனிக் கிரஹம்) உரிய எண்.

வள்ளுவன் முதல் பல தத்துவ ஞானிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். 

ஏன்?என்பதை பார்ப்போம்

கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் சொல்கிறான்,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை   (9)

இதன் பொருள் என்ன?

 ஒருவனுக்கு ஐந்து புலன்கள் இருந்தாலும் அவை அதனதன் வேலையைச் செய்யாவிடில் பயன் இல்லை. 

அது போல தலை என்னும் உறுப்பு எவ்வளவு சிறந்து இருந்தும், எட்டு வகையான குணங்களை உடைய இறைவனின் திருப்பாதங்களில் பணிந்து வணங்கவில்லை என்றால் பயன் இல்லை.

இதில் வள்ளுவன், இறைவனுக்கு எட்டு குணங்கள் இருப்பதாக சொல்கிறான். 

இது சைவ திருமுறைகளில் சிவ பெருமானுக்குச் சூட்டப்படும் அடைமொழி. 

இதை அப்பர், சுந்தரர் தேவாரத்திலும் காணலாம்.

எட்டு குணங்கள் யாவை?என்பதற்குத் திருக்குறள் உரைகளில் காணப்படும் விளக்கம் பின்வருமாறு:

தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், 

பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை என்று சைவாகமத்துக் கூறப்பட்டது. 

ஸம்ஸ்க்ருதத்தில் இவைகளை சுதந்தரத்துவம், விசுத்த தேகம், நிராமயான்மா, சர்வக்ஞத்துவம், அநாதிபேதம், அநுபதசக்தி, அநந்தசக்தி, திருப்தி என்று கூறுவர்.

இன்னொரு விளக்கம் 

அஷ்டமா சித்திகள் என்றும் கூறும்; அவை அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள். 

இதை கி.வா.ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆய்வுரையில் காணலாம்.

பரிதியார் உரையில் கூறுவதாவது: எட்டு 

குணங்கள் உடைய சிவனின்

சிவந்த தாளை வணங்காத் தலை, சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம். 

எட்டுக் குணமாவன: 

அநந்த ஞானம்,  அநந்த வீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு என்பன. 

சிலப்பதிகாரத்தில் (நாடு காண் காதை) சமண நாமாவளியில் எண்குணங்கள் யாவை என்று அரும்பதவுரை ஆசிரியர் கூறியது இது.

சிலப்பதிகாரத்தில், பண்ணவன் எண்குணன் (நாடு காண் காதை)

என்று இளங்கோ அடிகளும் பகர்வதை சமணர் சொல்லும் எட்டு குணங்கள் என்பர் சிலர்.

அப்பர் தேவாரத்தில் பல இடங்களில் சிவ பெருமானை எட்டு குணம் உடையவர் என்பார்:

எட்டு கொலாமவர் ஈறில் பெருங்குணம்  குணங்கள்தோள் எட்டு மூர்த்தி

கலை ஞானிகள் காதல் எண் குணவன்காண் எட்டு வான்குணத் தீசனெம்மான்

 (அப்பர் விடந்தீர்த்த.8, வன்னியூர் 7, தென்குரங்கு 4, இடைமருது 4) பாடல்களில் இவற்றைக் காணலாம்.

திருவள்ளுவருக்கு உருவ வழிபாடு உடன்பாடு என்பது இதனால் புலப்படும் என்றும் உரைகாரர்கள் புகல்வர்.

திருமந்திரத்தில் திருமூலர் கூறிய சிவபெருமானின் எண்குணங்கள்

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்

படையுடை யான்பரி சேஉல காக்குங்

கொடையுடை யாங்குணம் எண்குண மாகுஞ்

சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே. — (திருமந்திரம் — 444)

விளக்கம்:

சிவபெருமானை யாருடனும் ஒப்பிட முடியாது. 

அவனை யாரும் படைக்கவில்லை.

அவன் தான் அனைத்தையும் படைக்கிறான். 

அதனால் தான் அவனை நாம் விகிர்தன் என்று அழைக்கிறோம். 

அந்த விகிர்தன் காளையை ஊர்தியாகக் கொண்டவன், 

மிகுந்த பூதப் படைகளைக் கொண்டவன். 

நமக்கெல்லாம் அவன் கொடுத்தப் பரிசே இந்த உலகம். 

எட்டு குணங்களைக் கொண்ட நம் சிவபெருமான் நாம் வேண்டியவற்றை எல்லாம் அருளும் கொடைத்தன்மை உடையவன். 

அவன் நம் சிந்தையில் எப்போதும் இருக்கிறான்.

சிவபெருமானின் எட்டு குணங்கள் -

1. தன் வயத்தன்

2. தூய உடம்பினன்

3. இயற்கை உணர்வினன்

4. முற்றும் உணர்ந்தவன்

5. பாசங்களை விட்டு நீங்கியிருப்பவன்

6. பேரருள் உடையவன்

7. முடிவில்லாத ஆற்றல் உடையவன்

8. வரம்பில்லாத இன்பம் உடையவன்

கண்ணன் கூறிய எட்டின் சிறப்பு:–

இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில் பகன்ற எட்டு குணம் பின்வருமாறு:–

பூமிராபோ அனலோ வாயுஹு கம் மனோ புத்திரேவ ச

அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாக என் பிரக்ருதி பிரிவு பட்டிருக்கிறது (கீதை 7-4)

எட்டாம் மாதத்தில் தாயின் கருப்பையில் உடலைக்குறுக்கிக் கொண்டு துன்பப்படும் ஓர் உயிருக்கு, நாம் செய்த தீவினையால் தானே மீண்டும் ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். 

இந்தப் பிறவியில் நிச்சயம் நாம் தவறு ஏதும் செய்யக்கூடாது என்ற ஞானம் அதற்குத் தோன்றுவதாகக் கீதை ஓரிடத்தில் கூறுகிறது. 

ஆனால் பிறந்த பின் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். 

மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் (உயிரோடு இருந்தால்) 

நிச்சயம் தோன்றும். அதனால் எட்டை ஒரு ஞான எண்ணாகக் கூறுவார்கள்.

எட்டாம் எண் கூட்டுத்தொகை உடையவர்கள் ஒன்று தீவிர பக்தர்களாகவோ, தத்துவவாதிகளாகவோ, சமுதாயத் தொண்டர்களாகவோ இருப்பார்கள். 

ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குருவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களோ இருந்தால் அவர்கள் இப்பிறவியில் ஞானம் பெற்று முத்தியடைவார்கள் என்று சோதிடம் கூறுகிறது. 

பாரதத்தின் ஒப்பற்ற தவஞானி ஆதி சங்கரருக்கு எட்டாம் இடத்தில் குரு; மரணமில்லாமல் பெருவாழ்வை சாதித்துக் காட்டிய வள்ளலார் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் புதனும், சனியும். 

சைவ சித்தாந்தத்தின் வேத நூலாக சிவஞானபோதத்தின் எட்டாம் நூற்பா ஞானம் உணர்த்தும் முறையைக் கூறுகிறது. 

இந்த ஒரு நூற்பாவை மட்டும் ஏதேனும் ஒரு திருமடத்திலோ அல்லது ஒரு துறவியிடமோ தான் பாடங்கேட்க வேண்டும் என்ற மரபு இன்றும் உண்டு. 

எட்டாம் எண் யோகத்திற்கும் உரியது. தவமுனிவர்கள் மேற்கொள்ளும் யோகம் எட்டுவகைப்படும். 

அவை இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாகும். 

இந்த எட்டுவகை யோகங்களும் இடகலை, பின்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளை அடிப்படையாகக் கொண்டவை. 

அடி வயிற்றுக்குக் கீழே இடப்புறமிருந்து இடகலைநாடியும் வலப்புறமிருந்து பின்கலை நாடியும் தொடங்கிச் சுழிமுனை என்ற நாடியுடன் சேர்ந்து மீண்டும் பிரிந்து புருவமத்தியில் ஒன்று சேர்கின்றன. 

இதன் வடிவம் எட்டு.

இந்த யோகமுறையால் நம்மால் பின்வரும் எட்டுவிதமான சித்திகளை அடையமுடியும். 

நம் உடலை அனுவாகச் சுருக்கலாம். எவ்வளவு பெரிய உருவாகவும் பெருக்கலாம். 

எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லலாம், 

உடலை மிகமிக இலேசானதாக மாற்றலாம், தேவைப்படுவதை அடையலாம். 

எல்லாவற்றிலும் நிறைவானவனாக விளங்கலாம், 

யார் மீதும் எந்தப் பொருள்மீதும் தன் ஆட்சியைச் செலுத்தலாம்.

எதனையும் தன்வசமாக்கலாம். இதனை யோக முறையில் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று கூறுவார்கள். 

யோகத்திற்குரிய எட்டு உடையவர்கள் யோகம் பயிலத் தொடங்கினால் அதில் எளிதில் முன்னேறிச் செல்வார்கள். 

அவர்கள் அதைப் பயிலாவிட்டாலும் 

அவர்களுக்கு நிர்வாகத் திறமை, ஆளுமைப்பண்பு, எவரையும் கவரும் ஆற்றல் இயல்பாக அமைந்திருக்கும்.

எட்டு என்ற எண் தெய்வங்களோடு தொடர் புடைய எண்ணாகும். 

மனிதர்களைப் போலவே இறைவனுக்கும் குணங்கள் உண்டு. 

அந்தக் குணங்கள் எல்லாம் அவனுக்கு இருப்பதாக அருளாளர்கள் கூறுவார்கள். 

உண்மையில் பரம்பொருள் குணங்களும் வடிவங்களும் இல்லாதது. இறைவன் குணாதீதன், அதாவது குணங்களைக் கடந்தவன். 

இருப்பினும் அவனுக்கு குணங்களைக் கற்பிக்கும்போது எட்டு என்ற எண்தான் எல்லையாக அமைந்தது. 

இறைவனுக்குத் தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, இயற்கை உணர்வினன் ஆதல் ஆகிய எட்டுக் குணங்களை சைவ ஆகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.

எட்டுக் குணங்களைக் கொண்ட சிவபெருமான் எட்டு இடங்களில் எட்டு வீரச் செயல்களை நிகழ்த்திய தாகவும் கூறுவர். அந்த இடங்கள் அட்ட வீரட்டத் தலங்கள் எனப்படும். 

இறைவன் வரம்பற்ற ஆற்றல் உடையவனாக இருந்தாலும் அவன் நிகழ்த்திய வீரச் செயல்கள் எட்டுதான். 

திருவள்ளுவர் இறைவனைப் பற்றிக்கூறும்போது அவனை எண்குணத்தான் என்று எட்டுக்குச் சிறப்பு கொடுத்தே கூறுகிறார். 

சிவபெருமானுக்குத் தோள்களும் எட்டுதான். இறைவன் வடிவங்கள் கூறுவதும் எட்டுதான். 

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய எட்டும் அவன் திருவடிவங்கள்.

எட்டு எண்ணில் பிறந்தவர்களுக்கு எல்லாம் இருக்கும்;  ஆனால் இருக்காது. 

இறைவன் எல்லாம் உடையவன். இந்த உலகமும், வானமும் அண்டங் களும் அவற்றில் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை.

எனவே, இறைவனை உடையவர் என்றே வழங்குவார்கள். 

கல்வெட்டுகளில் அந்தக் கோயில்கள் எழுந்தருளியுள்ள இறைவனை அந்த ஊரின் பெயரைச் சேர்த்து உடையவர் என்றே கூறுகின்றன.

ஆனால், அவனுக்கென்று எதுவுமே இல்லை. அவனுக்குத் தாயும் தந்தையும்கூட இல்லை. 

அவன் ஓர் அனாதை. இதை மாணிக்கவாசகர் தாயும் இலி; தந்தையிலி; தான் தனியன் கானேடி!.

மாணிக்க வாசகரின் திருவாசகம் உள்ளத்தை உருக்கும்; உடம்பில் கலந்து உயிரில் கலக்கும். 

மாணிக்க வாசகர் சொல்லச் சொல்லத் தில்லை நடராசப் பெருமானே ஓர் ஏடெழுதும் பிள்ளையாக வந்து தம் திருக்கரத்தால் எழுதிய ஞானநூல். 

வெளிநாட்டினரின் உள்ளங்களைக் கவர்ந்த ஒப்பற்ற நூல். 

முத்தியில் பெறும் இன்பம் எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 

அதை முதன் முதலாக வார்த்தைகளில் வடித்துக்கொடுத்த தெய்வத்திருநூல். 

இது சைவர்களின் பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாவதாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.

எட்டுக்கும், மேலுலகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. 

தெய்வங்கள் எல்லாம் இந்த உலகத்திற்குத் தேவையான செல்வங்களை மட்டும் கொடுக்கக்கூடியவை. 

பிறவாமையைக் கொடுக்க அவற்றால் முடியாது. 

அவனது நடனம் ஆனந்த நடனம். அதைக் கண்டுவிட்டால் போதும் என்றும் ஆனந்தந்தான்.

ஆவதும் எட்டாலே; அழிவதும் எட்டாலே; போவதும் எட்டாலே; வருவதும் எட்டாலே.

எட்டு என்றதைக் கேட்டவுடன் பிடிக்காமல் போவதைப்போல இந்த நடராசனைக் கண்டாலும் யாருக்கும் பிடிக்காது. 

தப்பித் தவறி வீட்டுக்கு வந்து விட்டாலும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் எங்காவது ஒரு கோயிலில் வைத்துவிட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள். 

எல்லோருமே இறப்புக்குப்பின் சொர்க்கத்துக்குப் போக நினைக்கிறார்கள். 

அந்தச் சொர்க்கத்திற்குப் போகும் நுழைவாயில் நம் வீட்டு வாசற்காலைப் போல இல்லை; 

அது எண் கோண வடிவில் இருக்கிறது. 

கோயில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு 

உள்ளே அதன் மேல் உள்ள விமானப் பகுதி எண் கோணவடிவில் அமைந்திருக்கும். 

அதை மூடியிருக்கும் கல்லும் எண்கோண வடிவில் அமைந்திருக்கும். 

உள்பகுதியில் உள்ள எண் கோணத்தை பிரம்மரந்திரம் என்பார்கள். 

இறைவன் சொர்க்கத்தின் நாயகன்; அவன் போவதும் வருவதும் அந்த எண்கோண வழியில்தான். 

தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மூலவர் மிகவும் பெரிய உருவம். அவருக்குப் பெயரே தஞ்சைப் பெருவுடையார். 

அதற்குத் தகுந்தாற்போல் உள்கூட்ட எண்கோணம் மிகவும் பெரியது. 

அதை மூடத்தான் எட்டு டன் எடையுள்ள ஒரே கல் தேவைப்பட்டது. 

எண் கோண வடிவிலான அதை எப்படித் தூக்கிக் கீழேயுள்ள எண் கோணத்தில் பொருந்துமாறு நிறுத்தியிருப்பார்கள் 

என்று புரியாமல் இன்றும் வெளிநாட்டுக் கட்டிடக்கலை நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். 

இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

எண்சாண் உயரமுள்ள நம் உடலே ஒரு கோயில்; அதில் இதயமே மூலஸ்தானம். 

உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயமாம் என்றார் திருமூலர். 

நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் கோயில் கொண்டுள்ளான். 

நாம் கருப்பையில் இருக்கும்போது அவன் எப்படி அங்கு வந்திருப்பான். 

உடல் ஓயும்போது எந்த வழியாகப் புறப்பட்டு போவான். 

கருவாய் இருந்தபோது நம் உச்சித்துளை வழியே வந்து வந்த வழியிலேயே சென்றிருப்பானோ அந்தக் கள்வன்?

அவையெல்லாம் மனித அறிவுக்கு எட்டாதவை; 

அதையே திருமூலர் உள்ளத்தின் உள்ளே தான் அவன் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறான்; எனக்கு ஏற்படும் இரக்கம், கருணை எல்லாம் அந்த வள்ளலால் வந்தவை; என் ஓட்டை உடம்புக்குள் எப்படியோ வந்து புகுந்து எப்படியோ புறப்பட்டுத் தப்பிச் சென்று விடும் அந்த கள்ளர்கள் தலைவனை யாரால் அறிய முடியும்? என்று கேட்கிறார்.

உள்ளத்து ளேதான் கரந்துஎங்கும் நின்றவன்;

வள்ளல்; தலைமகன்; மலர்உறை மாதவன்;

பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்

கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே             திருமந்திரம்: 1531

இந்தக் கள்ளன் மண்டையோட்டின் உச்சித்துளை யாகிய உடம்புக்கோயிலின் பிரம்மரந்திரம் மூலம் வந்திருப்பானோ?

கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கடில்போது தந்தளித்த கள்வர் போலும்

என்று அப்பர் அடிகளும் கூறுகிறாரே. அப்படித்தான் இருக்குமோ?

அறிவுக்கெல்லாம் அறிவாக விளங்கும் அவனை அறிய யாரால் முடியும்? 

விஞ்ஞானிகளால் முடியாது; ஆனால் ஞானிகளால் முடியும். அவர்கள் அறிந்து கூறுவதை நம்புவோம்.

ஆக, எட்டு என்ற எண் மஹாபாரத காலத்தில் 

இருந்து, அப்பர் காலம் வரை ஆன்மீகத்தில் பயன்பட்டு வந்து இருக்கிறது.

இப்போது உங்கள் உச்சந்தலையில் கைவைத்துச் சொல்லுங்கள்! எட்டு கெட்ட எண்ணா?

எண்குணத்தான் அருள் பெறுவோமாக!

Comments

Popular posts from this blog

Dharbai தர்பை

கருங்காலி

4 நான்கு நாலு Four