கோரக்கர் சித்தர்

கோரக்கர் வரலாறு:

அடுப்புச் சாம்பலில் இருந்து வெளிப்பட்டு, பல அற்புதங்களை நிகழ்த்திய கோரக்கர் சித்தரின் பெருமையை இங்கே பார்க்கலாம்.

கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார். சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள்.

கோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக தொன்மங்கள் உரைக்கின்றன. கோரக்கர் கொல்லி மலைச்சாரலில் உள்ள சம்பல் பட்டியில் பிறந்தவர். இவர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் வசிஷ்ட மகிரிஷிக்கும் ஒரு குறவர்குடிப் பெண்ணிற்கும் மகனாகப் பிறந்தார்.

இவர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 18 சித்தர்களில் ஒருவர். இவர் சித்தர்களான அகத்தியர் மற்றும் போகர் ஆகியோரின் மாணவராக இருந்தார். போகரின் பல்வேறு படைப்புகளில் கோரக்கர் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஜீவ சமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு பொய்கை நல்லூரில் உள்ளது. இவர் தமது இளம் வயதினை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இவரது பிறப்பிடம் எனினும் வடநாட்டில் திருத்தலமான புருடன்குடி எனப்படும் இன்று பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரத்தில் அமைந்து உள்ளது.

கோரக்கரின் தொடர்புடைய பிற மடங்களாகப் பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திருக்கோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களைப் போலவே, கோரக்கர் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களையும் எழுதியுள்ளார்.

இவரது படைப்புகளாகக் கோரக்கர் மலாய் வாகதம் (கோரக்கரின் மலை மருந்துகள்), மலாய் வகாடம், கோரக்கர் வைப்பு, காலமேகம், மராலி வரதம், நிலாயோடுகம், சந்திரா ரெகாய் நூல் மற்றும் பல உள்ளன.

கோரக்கர் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்து சந்திரா ரெகாய் நூலில் எழுதியுள்ளார். இவர் கணித்த அத்தகைய ஒரு நிகழ்வு என்னவென்றால், மக்கள் கடவுள் மீதான நம்பிக்கையை இழக்கும்போது போகர் மீண்டும் உலகில் பிறப்பார்.

இவர் நீண்ட காலம் தங்கியிருந்த கோரக்கரின் குகை தமிழ்நாட்டின் சதுரகிரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

"ஆமே கேளிது நிலையற்ற வாணிபுக்கி  
ஆனபதி பொய்கைப் பூங்கா சொன்னேன்  
தேகமே பரிவிருத்தி ஆயிரத்துத்  
திகழ் நூற்றிருபது ஆறதாண்டில்  
பாமேவு சித்தர்களும் வெளியாய் வந்து  
பட்சமுடன் மனுக்களையும் ஆள்வார் மண்ணில்  
பூமேவு பொக்கிஷங்கள் பூரணிக்கும்  
பூரணியாள் பதமாய்ச் சொன்னேன் சித்தே"  
-கோரக்கர்  
(தனிநூல் தொகுப்பு 4, 5, 6)

பாடலின் பொருள் :

பொய்கைநல்லூர் என்னும் ஊரைச் சொன்னேன். பரிவிருத்தி ஆயிரத்து நூற்று இருபதாம் ஆண்டில் ஆற்றல் சித்தர்கள் வெளியே வந்து ஆன்மிக ஆட்சியை ஆள்வார்கள். அப்போது சித்தர்களின் பல அற்புத கருத்துப் பொக்கிஷங்கள் முழுமையடையும் என்பதை பூரணியின் அருளுடன் சொல்கிறேன்.

#கோரக்கர் வரலாறு:

ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார்.

கொல்லிமலையில் நெடுந்தவம் இருந்த சித்தர் மச்சேந்திரர் ஒரு நாள் அங்கிருந்து புறப்பட்டு பொதிய மலை செல்லும் விருப்பத்துடன் தென்திசைநோக்கிப் பயணித்தார். மக்களைச் சந்திக்கவும் அவர்களின் வாழ்க்கைத் துயர் போக்கவும் எண்ணம் கொண்ட மச்சேந்திரர், விண்வழிச் செல்லும் சித்து தவிர்த்து நடைப்பயணம் மேற்கொண்டார்.

வழி நடையில் சம்பல்பட்டி என்ற ஓர் சிற்றூரில் அவருக்கு தாகம் எடுத்தது. அங்கிருந்து ஓர் இல்லத்தில் சென்று குரல் கொடுத்து நின்றார். அந்த இல்லத் தலைவன் சிவராம தீட்சிதர் அப்போது வீட்டில் இல்லை. அவரது மனைவி மட்டுமே இருந்தார். வந்திருப்பவர் எவர் என அறிய முடியவில்லை எனினும், அவர் ஒரு சிவனடியார் என்பது  தெரிந்து, நீர் மட்டுமே கேட்ட அவரை வீட்டுக்குள் அழைத்து அன்பொழுக இலை போட்டு பசியும் தாகமும் தீர்த்து பணிந்து வணங்கினார்.

உபசரிப்பில் மனம் குளிர்ந்தவராக, அம்மையாரை வாழ்த்திய மச்சமுனி சித்தர், அம்மையாரின் முகத்தில் இழையோடிய சோகத்தைக் குறிப்பால் உ ணர்ந்தார். ''உன் வாழ்வில் ஏதோ ஒரு பெரும் குறை. அது என்ன தாயே?" என்று வினவினார். தயங்கியபடி அவரும் தன் வாழ்வில் எல்லா வளநலமும் இருந்தும் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

தன் இடையில் இருந்த திருநீற்றை எடுத்த மச்சேந்திரர், அதை ஒரு பச்சிலையில் வைத்து வழங்கி "அம்மையே! உன் கணவனுடன் நீராடி சிவத்தியானம் செய்து இந்தக் கவசத் திருநீற்றினை இருவரும் அணிந்து வணங்குங்கள் எஞ்சியதை தூய நீரில் இட்டுப் பருகுங்கள். உங்கள் நெடுநாள் குறை விரைவில் நீங்கும். பரமஞானி ஒருவன் உங்களுக்கு மகவாக வந்துதிப்பான்!" என ஆசீர்வதித்து விட்டு பொதிகை மலை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

பிறகு சிவராம தீட்சிதரின்  
துணைவியார் நீராடச் சென்றார். நீராடுவதற்கு உடன் வந்த பெண்களிடம், சிவனடியார் கொடுத்த கவசத் திருநீறு பற்றிய விஷயத்தைக் கூறினார். அதைக் கேட்ட அந்தப் பெண்கள், ''கண்டவன் தரும் திருநீற்றை அணியாதே. அவன் பெண்களை வசியம் செய்யும் மந்திரக் கயவனாக இருக்கலாம்!" என எச்சரிக்கின்றனர். பயந்துபோன அம்மையார் அடுப்பு நெருப்பில் மச்சேந்திரர் கொடுத்த திருநீற்றைப் போட்டு விட்டார். பத்து ஆண்டுகள் உருண்டோடின...

பொதியமலை சென்று யோகம் புரிந்து பல சித்திகள் பெற்ற மச்சேந்திரர் மீண்டும் சம்பல்பட்டி வழியாகவே கொல்லிமலை நோக்கிப் பயணம் செய்கிறார். அப்போது சிவராம தீட்சிதரின் வீட்டில் உணவு உண்டது நினைவுக்கு வருகிறது. அவரின் இல்லம் செல்கிறார். வாயிலில் நின்றிருந்த தீட்சிதரின் மனைவிக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.

மச்சேந்திரர் ''அம்மா! என் அருளால் உனக்கு வாய்த்த உன் மகன் நலமாக இருக்கிறானா?" எனக் கேட்கிறார். பயந்து கூனிக்குறுகி, அவர் கொடுத்த திருநீற்றை அச்சம் காரனமாக அடுப்பு நெருப்பில் எரித்ததைக் கூறி மன்னிப்பு வேண்டுகிறார்.

அவரின் அறியாமை கலந்த அச்சத்தை உணர்ந்த மச்சேந்திரர் தன் சினம் மறைத்து, அடுப்புச் சாம்பலைக் கொட்டும் இடத்துக்குத் தன்னை அழைத்துச் செல்லும்படி கட்டளை இடுகிறார். அம்மையார் கொல்லைப் பக்கம் உள்ள குப்பை மேட்டுக்கு மச்சேந்திரரை அழைத்துச் செல்கிறாள். அதற்குள் அங்கு தெரு ஜனங்கள் கூடி விடுகின்றனர். மச்சேந்திரர் குப்பைமேட்டை நோக்கிக் கண்மூடி தியானித்த பின் ''கோரக்கா! வெளியில் வா!" என்கிறார். ''இதோ வருகிறேன் குருநாதரே!" என்ற குரலுடன் பத்து வயது தோற்றத்தில் பாலகன் ஒருவன் முகப்பொலிவுடன் விபூதி மணக்க வெளியே வருகிறான். அம்மையார் ஆனந்தக் கண்ணீர் உகுக்கிறார். கூடியிருந்தோர் வியந்து மச்சேந்திரனின் காலில் விழுந்து வணங்குகின்றனர்.

"உன் தாயை வணங்கு கோரக்கா! சிவனருளால் என்னிடம் சித்துகள் பயின்று உன் பெற்றோர் வியக்கும் சித்தனாக நீ நீண்டகாலம் சிவத்தொண்டு புரிவாய்!" என ஆசீர்வதிக்கிறார். குருவை வணங்கியபின் தாயை வணங்கி எழுகிறான் சிறுவன் கோரக்கர்.

ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார்.

வடையைத் தின்ற மச்சேந்திரர் மறுநாளும் அதே போன்ற வடை வேண்டும் என்று கேட்டார். கோரக்கரும் மறுநாள் வடை தந்த வீட்டிற்கே பிச்சை கேட்டு சென்றார். ஆனால் அப்பெண்ணோ வடை இல்லை என்று சொல்லி சாதம் போட்டாள். ஆனால் கோரக்கரோ தன் குருவிற்கு வடைதான் வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்தது. எது இருக்கிறதோ அதைத் தானே போடமுடியும், என்றாள்.

‘’உன் குரு வடை கேட்டதால் போயிற்று; இதுவே உன்னுடைய கண்ணை வேண்டுமென்று கேட்டால் தருவாயா,’’ என்றாள். இதனைக் கேட்ட கோரக்கர் ‘’என்னுடைய குருநாதர் என் கண்ணைக் கேட்டாலும் தருவேன். அந்த கண்ணை நீயே பெற்றுக் கொண்டு வடையைக் கொடு,’’ என்று கூறி தன்னுடைய கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்தார்.

இதைக் கண்ட அப்பெண் அச்சம் கொண்டு உடனே இனிமையான வடைகளை நெய்யில் சுட்டுக் கொடுத்தாள். வடையை கோரக்கர் தம்முடைய குருவிற்களித்தார். வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரை பார்த்து உன்னுடைய கண் எங்கே என்று கேட்க கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார்.

கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்பப் பெறுமாறு செய்தார். ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசிக்கு, மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார்.

மச்சேந்திரரை பார்த்து ‘’குருவே புறப்படுங்கள்; நாம் நமது இருப்பிடத்திற்குச் செல்வோம்,’’ என்று அழைத்தார்.

இவர்களுக்கு வழிச்செலவிற்கு வேண்டும் என்று அரசி பிரேமலா ஒரு தங்கக் கட்டியை பையிலிட்டு, கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர்.

இதனை கவனித்த கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு கல்லை வைத்தார்.

மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையை திறந்து பார்த்த பொழுது தங்கத்திற்கு பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது கோபம் கொண்டார்.

“அடப்பாவி! நீ என்னுடைய பொருளை கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்கு சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதே” என்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார்.

உடனே அந்த மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.

பின்னர், திருக்கையிலாயத்தை அடைந்து அங்கு அல்லமாதேவர் என்பவரை சந்தித்தார். கோரக்கர் அல்லமா தேவரிடம், நீங்கள் யார், என்று கேட்டார்.

அதற்கு அவர், இறந்து போகும் உடலில் பற்றுக்கொண்டுள்ளவரை மதித்து சொல்லத்தக்கது ஒன்றுமில்லை, என்றார்.

கோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலை பெற்றவன் நான் என்றார். ஆனால் அல்லமரோ காய சித்தி பெற்றுள்ளதால் வாழும் நாள் அதிகமாகுமே அன்றி அது நிலைத்திருக்காது. ஆகவே அழியும் இந்த உடலை அழியா உடலாகக் கூறுவது வீண் என்றார்.

‘’வீண் தர்க்கம் வேண்டாம் இதோ நிரூபித்து காட்டுகிறேன்,’’ என்று கூறி அல்லம தேவரிடம் கூர்மையான வாளினைக் கொடுத்து உன் தோள்வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் கோரக்கரை வெட்டினார். உடலின் மீது பட்ட வாள் ‘கிண்’ என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித ஊறுபாடும் உண்டாக்கவில்லை. செருக்குடன் அல்லமரை கோரக்கர் நோக்கினார்.

அல்லமர் கோரக்கரை நோக்கி “சரி, உன் திறமையை நிரூபித்து விட்டாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு” என்று கூறினார்.

கோரக்கரும் அல்லமரை வாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் அல்லமரின் உடலில் புகுந்து வெளிப்பட்டது. மறுபடியும் வெட்டினார். காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. தன்னைவிட மிக்க சக்தி பெற்ற அல்லமரை வணங்கி தன் பிழையை பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பிலுள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமர்.

இதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார். கோரக்கர் செய்த நூல் “கோரக்கர் வைப்பு” என்று மீன் குஞ்சு வடிவத்தில் மச்சேந்திரர் கேட்ட தாரக மந்திரமே ஞானசர நூல் என்றும் கூறுவர்.

இதில் சரம்பார்க்க ஆசன விதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன.

கோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிஐயும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும், வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள்.

யாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள் மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள்.

‘கோரக்கர் மூலிகை’ (கஞ்சா), ‘பிரம்மபத்திரம்’ (புகையிலை) பெண்கள் மீது மோகித்த அக்கினியும், வாயுவும் நெருப்பும், நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, “இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார்.

கோரக்கர் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள்.

இதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள்.

கோரக்கரின் சிவயோகத் தலயாத்திரையில் ஒருமுறை சதுரகிரி அடிவாரத்தில் உள்ள மகாலிங்க மலைக் குகையில் தவம் மேற்கொண்டார்.அந்தக் குகைக்கு அருகில் அவர் வழிபட்ட லிங்கமும் ஒரு நீரோடையும் உள்ளன. அந்த நீரோடை இன்றும் கோரக்கர் தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. கோரக்கர் குகைக்கு மேலே 4 கி.மீ. உயரத்தில் மகா லிங்கேஸ்வரர் லிங்க வடிவில் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.

கோரக்கர் சீனாவில் இருந்துள்ளார், பின்னர் தமிழகம் வந்து சில வருட தவ வாழ்க்கைக்குப் பின் தில்லைவனம் சென்று சிதம்பர ரகசியத்தை உருவாக்கியதில் போகருடன் இருந்திருக்கிறார். போகரின் மறுவருகை பற்றியும் தமிழகத்தின் எதிர்காலம் பற்றியும் கோரக்கர் ‘சந்திரசேகை 200’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

கோரக்கரின் பூர்வ ஜென்மத்தில், அத்திரி என்ற முனிவருக்கு எட்டு சீடர்கள் இருந்தனர். அவர்களில் கோரக்கரும் ஒருவர். கோரக்கரின் குருபக்திகாக அத்திரி மகரிஷி தாம் தவம் செய்ய அத்திமரத்தடியில் தண்டத்தால் தட்டி, தம் கமண்டலத்திலுள்ள நீரைத் தெளித்து அங்கேயே கங்கையை உற்பத்தி செய்து அதில் கோரக்கரை நீராடச் செய்தார். இன்றும் அது அத்திரி கங்கை என்றே அழைக்கப்படுகிறது.அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் ஆதிசிவசைலம் எனப்படும் அத்திரி மலைக்கோயில் உள்ளது.

இங்குள்ள ஆதி சிவசைல நாதர் அத்திரி முனிவரால் வழிபட்டதால் அத்திரிபரமேஸ்வரர் என்றும் கோரக்கரால் வழிபடப்பட்டதால் கோரக்கநாதர் என்றும் திருப்பெயர்கள் கொண்டுள்ளார். இங்குள்ள ஆறுபட்டை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின் திருநாமமும் அத்திரிபரமேஸ்வரி என்பதே ஆகும்.

#பேரூர் பட்டீஸ்வரர் கோயிலும் கோரக்கர் சித்தரும் :

மச்சமுனியின் பேரருளால் கோ சாலையில் அவதரித்தவர் இவர். காமதேனு பசு வழிபட்ட தலம், கோ சாலையில் அவதரித்த கோரக்க சித்தர் என பல தொடர்புகள் பட்டீஸ்வரர் கோயிலுக்கு உண்டு.

கோயிலுக்குப் பின்னே, பாலதண்டாயுதபாணி சந்நிதி அமைந்துள்ளது. இந்த சந்நிதிக்கு அருகே, வில்வ மரத்தடியில் அமர்ந்துகொண்டு, கோரக்க சித்தர் பெருமான் தவமிருந்தார். அவருக்கு சிவனார் திருக்காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.

#புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோரக்கர் காடு என்ற கோர்க்காடு:

சித்தர் கோரக்கர் மூங்கில் காடுகள் நிறைந்த இவ்வூரிலே  கோவநேஸ்வரரை வழிபட்டு வாழ்ந்து வந்ததாகவும், இங்கேயே தவம் இயற்றி முக்தி அடைந்ததாகவும் வரலாறு. ஆகையால் இவ்வூருக்கு கோரக்கர் காடு என்றானது , அதுவே நாளடைவில் மருவி கொர்காடு என்று அழைக்கபடுகின்றது.

ஜீவ சமாதிகள்:

1. பொதிய மலை  
2. ஆனை மலை  
3. கோரக் நாத்திடல் (பாண்டிய நாடு)  
4. வடக்கு பொய்கை நல்லூர்  
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு)  
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி)  
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்)  
8. கோரக்பூர் (வட நாடு)  
இவற்றில் வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பொதிய மலை ஆனைமலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக்நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் என்ற இடத்திலுள்ளது. அங்குள்ள கோரக்கர் சமாதிக்கு சித்ரா பௌர்ணமியன்று பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோரக்நாத் மந்திர் என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது. ஐப்பசி பௌர்ணமி நாளில் சமாதி கூடிய இவர் அன்றைய தினம் வழிபடுபவர்க்கு (வடக்கு பொய்கை நல்லூரில்) இன்றும் வரம்பல அருளும் பேரருளாளர்.

#வடக்கு_பொய்கை_நல்லூரில் உள்ள  ஜீவ சமாதி:

கோரக்க சித்தருக்கு இறைவன் காட்சி தந்த தலம் வடக்கு பொய்கை நல்லூர். கோரக்க சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.

கோரக்கர் பொய்கை நல்லூரில் சமாதி காலம் கி.பி. 1233ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்குப் பின்னும் வாழ்ந்திருந்தார் என கூறப்படுகிறது.

போகரும் கோரக்கரும் பழனியில் முருகன் சிலையை சிலை செய்து அதனை பழனியில் நிறுவியபின் ஆசிரமத்தையும் கோவிலையும் பராமரிக்கும் வேலையை புலிப்பாணி சித்தரிடம் ஒப்படைத்துவிட்டு கோரக்கரை தனிமையில் அழைத்து தன்னை பழனியில் சமாதி வைத்த பின் நீ வடக்குப்பொய்கை நல்லூர் சென்று அங்கேயே நீ தவம் செய்து கொண்டிரு நான் என் சமாதியில் இருந்து வெளிப்பட்டு நான் அங்கு வந்து உன்னை சமாதியில் அடக்கம் செய்கிறேன் என்று போகர் கூறினார்.

அதன்படி கோரக்கர் போகரை சமாதியில் அடக்கம் செய்துவிட்டு தான் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரதிரத்தன்று சமாதி அடைந்து விடுவேன் என்று கூறி வடக்குப்பொய்கை நல்லூர் வந்து சேர்ந்தார். கோரக்கர் சமாதிநிலை அடைவதை காண எல்லா சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் அடியார்களும் மற்றும் பக்தர்களும் அவ்வூர் மக்களும் கூடியிருந்தனர்.

அப்போது கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார்.அப்போது போகர் கோரக்கரை பார்த்து கலியுகம் முடியும் வரை நீ இங்கு இருந்து உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும் என்று வாழ்த்து கூறினார்.மேலும் எதிர்காலத்தில் நடக்க போகும் பல அதிசயங்களை பற்றியும் எடுத்துரைத்தார்.

அதன் பின் கோரக்கர் சமாதியில் இறங்கினார்.அப்போது வானவர்களும் சித்தர்களும் முனிவர்களும் ரிஷிகளும் கோரக்கருக்கு வாழ்த்துக்கள் கூறி பூமாரி பொழிந்தார்கள்.அப்போது அம்மையும் அப்பனும் கோரக்கருக்கு நேரில் காட்சி அளித்தனர்.போகர் அவரை சமாதியில் அடக்கம் செய்தார். எனவே தான் கோரக்கர் சமாதியான இடத்தில் ஈசன் திருவடிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகின்றன, இன்றும் சிவசக்தியின் திருவருளும் கோரக்கர் சித்தரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது.

கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிவிதமான சக்தி உண்டு. குருவாரம்,பௌர்ணமி,அம்மாவாசை போன்ற நாட்களில் மகான் அருள் வேண்டி இரவில் பக்தர்கள் அங்கு தங்கி செல்கிறார்கள்.

கோரக்கர் சித்தர் சமாதியில் நாள்தோறும் இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு சம்பிரதாயம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இரவில் ஆசிரமத்தின் பூசாரி, தன் தோளில் இரண்டு பெரிய பானைகள் உரியில் தொங்கும் ஓர் அன்னக் காவடியை சுமந்தபடி வடக்குப்பொய்கை நல்லூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார். அன்னக்காவடி தர்மம் என ஓவ்வொரு வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடியில் பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர்.

‘சுத்தான்னம்’ எனப்படும் சுடுசோற்றை ஆசிரமம் சென்ற பின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூசை நடைபெறுகிறது, பிறகு பூசை செய்த சுத்த அன்னம் அடியவர்களுக்கு இரவு உணவாக வழங்கப்படுகிறது. இந்த இரவு உணவை உண்ணும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்கின்றனர். இதை பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் நம்பி வருகின்றனர் பக்தர்கள்.

பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தின் வெளியில் வலதுபுறத்திலுள்ள வன்னிமரத்தடியில் சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார். ஐப்பசி பௌர்ணமி நாளில் வடக்கு பொய்கை நல்லூரில் வழிபடுபவர்க்கு இன்றும் வரம் பல அருளுகிறார்.

இன்றளவும் குருமுகாந்திரமாக தீட்சை பெற்று சித்தரானவர்கள் கோரக்கரை வழிபட்டால்தான் சுருதியின் உண்மை நிலையை உணரமுடியும் என்கிற நிலை விளங்கி வருகின்றது.

பூசை முறை:

கோரக்கர் சித்தரின் பூசை முறை தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையை மஞ்சளிட்டு மெழுகி கோலமிட்டு, மஞ்சள், குங்குமம், மலர்களால் அலங்கரித்த குத்துவிளக்கை வைத்து தாமரைத் தண்டு அல்லது வாழைத்தண்டு திரி போட்டு ஐந்தெண்ணை ஊற்றி ஐந்து முக விளக்கேற்ற வேண்டும். பலகையின் மேல் சித்தரின் திருவுருவப்படத்தை வைத்து படத்திற்கு பல வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லி, தாமரைப்பூ, சம்பங்கி அழகிய மலர்களால் பின்வருமாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்து வணங்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. முருகக் கடவுளின் பிரியரே போற்றி!  
2. வாக்கில் சுத்தமுடையவரே போற்றி!  
3. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!  
4. கஷ்டங்களை போக்குபவரே போற்றி!  
5. அடுப்புச் சாம்பலில் தோன்றியவரே போற்றி!  
6. ஆசைகளற்ற அருளே போற்றி!  
7. மாயைகளை களைபவரே போற்றி!  
8. பூலோகச் சூரியனே போற்றி!  
9. மாசற்ற மனமே போற்றி!  
10. புகழும், அருளும் நிறைந்தவரே போற்றி!  
11. ஞான வழி காட்டுபவரே போற்றி!  
12. ஞானஸ்கந்தரே போற்றி!  
13. ஜீவ ஜந்துக்களை காப்பவரே போற்றி!  
14. காவி வஸ்திரம் தரிப்பவரே போற்றி!  
15. உலக மக்களில் நண்பரே போற்றி!  
16. உறுதியான மனதிடம் உள்ள கோரக்க சித்தரே போற்றி! போற்றி! என கூறி வணங்க வேண்டும்.

பிறகு மூலமந்திராமான “ஓம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை சொல்லி வழிபடவேண்டும். நிவேதனமாக வாழைப்பழம், கடுக்காய் தீர்த்தம், அரிசிப்பொறி, அவல், பொட்டுக்கடலையுடன் நாட்டுச் சக்கரை கலவை வைத்து வழிபடவேண்டும். மனமுருக வேண்டி நிறைவாக தீபாராதனை செய்யவேண்டும்.

கோரக்கர் இயற்றிய நூல்களாக இப்பொழுது கிடைப்பவை:

1. கோரக்கர் சந்திர ரேகை  
2. கோரக்கர் நமநாசத் திறவுகோல்  
3. கோரக்கர் ரக்ஷமேகலை  
4. கோரக்கர் முத்தாரம்  
5. கோரக்கர் மலைவாக்கம்  
6. கோரக்கர் கற்பம்  
7. கோரக்கர் முத்தி நெறி  
8. கோரக்கர் அட்டகர்மம்  
9. கோரக்கர் சூத்திரம்  
10. கோரக்கர் வசார சூத்திரம்  
11. கோரக்கர் மூலிகை  
12. கோரக்கர் தண்டகம்  
13. கோரக்கர் கற்ப சூத்திரம்  
14. கோரக்கர் பிரம்ம ஞானம்

கோரக்கர் சித்தர் பூசை பலன் :

1. ஜாதகத்திலுள்ள சனி தோஷங்கள் வலகி நன்மை உண்டாகும்.  
2. போக்குவரத்து துறையில் உள்ளவர்களுக்கு உண்டான பிரச்சனைகள் தீரும்.  
3. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும்.  
4. எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.  
5. படிப்பில் உள்ள மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்.  
6. நன்மக்கட் பேறு கிடைக்கும்.  
7. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.  
8. பிரம்மஹத்தி தோசம் நீங்கும்.  
9. வீண்பயம் அகன்று தைரியம் உண்டாகும்.  
பூசைக்கு ஏற்ற நாள் கார்த்திகை நட்சத்திர நாள், நல்ல பலன் தரும்.

அமைவிடம் :

மாநிலம் : தமிழ் நாடு

வடக்கு பொய்கை நல்லூர்  நாகை – திருத்துறைப்பூண்டி பேருந்து வழித்தடத்தில் நாகையிலிருந்து 4 கி.மீ. தொலைவில்  உள்ளது. நாகப்பட்டிணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈச்சங்குப்பம், அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் வழியாகவும் வடக்கு பொய்கை நல்லூர்  வரலாம்.

ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

Dharbai தர்பை

கருங்காலி

4 நான்கு நாலு Four