ஜபம் மந்திரம்
https://youtu.be/W60rC2ZumOE
https://youtu.be/gZB_2aSzn94
மூன்று வகை அழுக்குகள்
மன அழுக்கு 2. வாய் அழுக்கு 3.
உடம்பு அழுக்கு என அழுக்குகள் மூன்று வகை.
பொறாமை, பகை, கோபம், ஆசை என்பன மனத்தால் ஏற்படும் அழுக்குகள். இவற்றைத் தியானம் என்ற நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.
பொய் சொல்வது, அடுத்தவனைப் பற்றிப் புறம் சொல்லித் திரிவது, கோள் சொல்வது, தீமையான சொற்களைப் பேசுவது, தெய்வத்தைப் பழிப்பது, ஞானிகளைப் பழிப்பது, நல்ல பெண்களைப் பழிப்பது ஆகியவை வாயால் ஏற்படும் அழுக்குகள். இறைவனைப் பற்றிய மந்திரங்கள், தோத்திரப்பாடல்கள் பாடி இந்த அழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும்.
கொலை, களவு, பிறா் மனைவியோடு தகாத உறவு முதலியவை உடம்பால் ஏற்படும் அழுக்குகள். அவற்றை அர்ச்சனை என்ற நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.
மந்திர ஜபம்: ஏற்ற இடங்கள்:
வீட்டிலிருந்து ஜபித்தால் ஒருமுறை உருவேற்றியதாகும்.
பசுக்கொட்டிலிலிருந்து ஜபித்தால் ஒன்று நூறு ஆகும்.
நந்தவனத்திலிருந்து ஜபித்தால் ஒன்று ஆயிரமாகும்.
மலைமேலிருந்து ஜபித்தால் ஒன்று பதினாயிரம் ஆகும்
நதிக்கரையிலிருந்து ஜபித்தால் ஒன்று லட்சம் ஆகும்.
ஆலயத்தில் ஜபித்தால் ஒன்று கோடி ஆகும்.
மந்திர ஜபம் செய்யும் போது கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், தூக்கம், சோம்பல், வாதம் முதலியவை கூடாது.
மந்திர ஜபம்
மந்திர ஜபம் மூன்று வகைப்படும்.
பிறா் காதுகட்குக் கேட்குமாறு மெதுவாக ஜபிப்பது
தன் காதுகட்கு மட்டும் கேட்குமாறு நாக்கின் நுனி உதட்டைத் தீண்ட ஜபிப்பது.
நாக்கின் நுனி உதட்டைத் தீண்டாமல் மன ஒருமையோடு ஜபிப்பது.
முதலாவது நூறு மடங்கு பலம் கொண்டது. இரண்டாவது அதைவிட பதினாறு மடங்கு பலம் கொண்டது. மூன்றாவது கோடி மடங்கு பலம் வாய்ந்தது.
மந்திரங்களின் சக்தி
பல சூட்சுமமான சொற்கள் ஜபத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றன. சமஸ்கிருத மொழியில் அவை
மந்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
ஜபிப்பவனைக் காப்பாற்றி மோட்சம் அளிப்பதே மந்திரம்.
மந்திரம் என்பது இறை சக்திக்கு – கடவுளுக்கு நிகரான ஒலி.
அதனால் ஏற்படும் ஒலி அலைகள் நம்முள் தெய்வ சக்தியைத் தோற்றுவிக்கின்றன.
ஜபம் செய்யச் செய்ய நம்முள் மனத்தெளிவு ஏற்பட்டு, தெய்வீக சக்தியோடு கூடிய அலைகள் எழும்புகின்றன. அவை யாவும் இறை சக்தியே! இவ்விதம் எழும்பும் தெய்வ சக்தியே சாதகன் இறை ஞானம் பெற உதவுகிறது.
தெய்வம் வேறு அதன் உருவம் வேறல்ல. தெய்வத்தின் நாமமும், அந்த தெய்வத்திற்குரிய மந்திரமும் வெவ்வேறானவை அல்ல.
எல்லாச் சொற்களும் மந்திரங்களாக ஆக முடியாது. மந்திரங்களும் வெறும் சொற்கள் அல்ல. அவை தெய்வ சக்தி வாய்ந்த அதி சூட்சுமமான சொற்கள்.
ஞானிகளும் ரிஷிகளும் ஆத்ம ஞானம் பெற்ற சமயத்தில் அந்த மந்திரங்களைத் தரிசித்தார்கள். அவற்றை அவா்கள் ஒளி வடிவமாகவோ, அல்லது ஒலி மூலமாகவோ கண்டார்கள்.
ஒரு சாதாரண மனிதனுக்கு மந்திரம் என்பது வெறும் சப்தமாகத் தோன்றும். ஆனால் அதுவே ஒரு ஆத்ம சாதகனுக்கு ஆத்ம
ஞானத்தையே அளிக்கக்கூடிய வல்லமை பெற்ற ஒரு சொல்.
எப்படி ஒரு சிறிய ஆலம் விதையில் பிரம்மாண்டமான ஒரு பெரிய ஆலமரமே அடங்கி இருக்கிறதோ, அது போலவே ஆத்ம குணம் என்பது ஒரு மந்திரத்தில் சூட்சுமமாகப் படிந்திருக்கிறது.
கணிதத்திலோ அல்லது பௌதிக விஞ்ஞானத்திலோ உள்ள சூத்திரங்கள் அதில் பழக்கப்படாதவனுக்குப் புரியாது. அதுபோலவே சாதாரண மனிதா்கட்கு ஓம், க்ரீம், (Hreem) போன்ற சக்தி வாய்ந்த மந்திரங்கள் பொருளற்ற வெறும் சொற்களாகவே தோன்றும்.
மந்திரத்துக்குச் சக்தி உண்டு என்பதும். அதன் மூலம் நாம் உபாசிக்கும் தெய்வம் நம் ஜபத்திற்கு பலன் அளிக்கிறது என்பதும் அதன் மூலம் நாம் ஆத்ம சாட்சாத்காரம் பெறுவது என்பதும் – இவை யாவும் உண்மையே!
வெவ்வேறு மந்திரங்கள் இறைவனின் வெவ்வேறு நிலையைக் குறிப்பிடுகின்றன. சில பரம்பொருளின் மேலான நிலையையும் சில அவருக்கே உரித்தான அம்சங்களையும் குறிக்கும். எனவே ஒவ்வொரு மந்திரமும் இறைவனின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைக் குறிக்கும் மூலச் சொல்லாகும்.
குரு – சிஷ்ய பாரம்பரியமாகத் தொடா்ந்து வந்து கொண்டிருக்கும் சில சக்தி வாய்ந்த மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் நாம் ஆத்ம ஞானத்தைப் பெற முடியும் என்று மந்திர சாத்திரங்கள் நம்புகின்றன.
ஒரு மந்திரத்தை ஜபிக்க ஜபிக்க காலப்போக்கில் அந்த மந்திரத்துக்குரிய தெய்வத்தின் காட்சியைப் பெற முடியும் என்று சிலா் கருதுகிறார்கள். ஆனால் அதே சமயம் தகுதியில்லாத ஒரு குருவிடமிருந்து ஒரு மந்திரத்தைப் பெற்றுக் கொண்டோமேயானால் அது எந்தவிதப் பயனையும் தராது என்ற கருத்தும் இருக்கிறது.
சில வைதீகச் சடங்குகள் செய்து அவற்றின் மூலம் அந்த மந்திரத்தைச் சைதன்யமாக (உயிருள்ளதாக) செய்ய வேண்டும். அதன் பிறகுதான் அதன் ஜபம் பலன் அளிக்க வல்லதாகும்.
இறைவன் இந்த உலகைப் படைப்பதற்கு முன்பு ஒலி அலைகளை எழுப்புகின்றான். அவ்விதம் முதலில் தோன்றும் ஒலியே பிரணவம். (ஓம் என்ற ஒலி) இது பிரம்மத்தையும் அதனுடைய தனித்தன்மையையும் குறிக்கும். அதிலிருந்தே மற்ற எல்லா ஒலிகளும் தோன்றுகின்றன.
பிரணவ ஒலியே நாத பிரும்மம். அதுவே அநாகதத்தொனி. இந்தப் பிரபஞ்சத்தில் தங்கு தடையின்றி ஒலித்துக்கொண்டிருக்கும் சப்தமே அநாகதத்தொனி.
அனைத்து மந்திரங்கட்கும், ஒலிகட்கும், சொற்கட்கும் பிரம்மமே தாய்.
முதலில் பிரும்மம் மட்டுமே இருந்தது. அதைத்தொடா்ந்து நாதம் எழும்பியது! நாதமே பிரம்மம் என்று வேதங்கள் கூறுகின்றன.
நாம் ஒரு மந்திரத்தை முதலில் ஜபிக்கும்போது அது நமது உள்ளில் முதலில் ஓா் அதிர்வை ஏற்படுத்துகிறது. அடுத்து
இரண்டாவது முறையாக அதை நாம் உச்சாடனம் செய்யும்போது மீண்டும் ஓா் அதிர்வு அலையை எழுப்புகிறது. இவ்விதமாக அடுத்தடுத்து எழுப்பும் அதிர்வுகள் முந்தின அதிர்வுகளை மேலும் மேலும் வலுப்படுத்துகின்றன. இவ்விதமாக வலுப்பட்ட ஜபம், ஜபிப்பவனுக்கு இறை நாமத்தில் சுவையை ஏற்படுத்தி அவனை இறைவனிடம் அழைத்துச் செல்கிறது.
பஞ்சாட்சர மந்திரம், சடாட்சர மந்திரம். சம்ஹிதா மந்திரம், அஸ்திர மந்திரம் முதலிய மந்திரங்கள் உண்டு. இவை ஒரு குருவின் மூலமாக உணரத் தகுந்தவை.
ஆலயங்களில் தெய்வங்களை நிறுவுதல், அபிஷேகம், ஓமம், தா்ப்பணம், பிராயச்சித்தம், தீட்சை முதலிய எல்லாக் கிரியைகளையும் மந்திரங்களின் துணைகொண்டே செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி, மந்திரமில்லாமல் தனிக்கிரியை கிடையாது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் மந்திரம் உண்டு. இம்மந்திரங்கள் அந்தத் தெய்வங்களின் சூக்கும வடிவம் ஆகும்.
அத்வைத சித்தி பெற்ற மதுசூதன சரஸ்வதி என்ற மகான் கிருஷ்ண மந்திரத்தை ஜெபித்து கிருஷ்ணனது காட்சியைப் பெற்றார்.
“பஞ்சதசி” என்ற நூலின் ஆசிரியரான சுவாமி வித்யாரண்யா் காயத்திரி மந்திர ஜெபம் செய்து காயத்திரி தேவியின் தரிசனம் பெற்றார் என்பது வரலாறு.
ஒவ்வொரு தெய்வ மந்திரமும் அளப்பரிய சக்தி படைத்தவை. ஓம் நமசிவாய! என்பது சிவனுக்குரிய மந்திரம். ஓம் நமோ நாராயணாய! என்பது விஷ்ணுவுக்குரிய மந்திரம். ஓம் சரவணபவ! என்பது முருகனுக்குரிய மந்திரம்! இவ்வாறு ஒவ்வொரு தெய்வத்துக்கும் மந்திரம் உண்டு.
உரிய முறைப்படி மந்திர ஜெபம் செய்தால், அந்தந்தத் தெய்வத்தின் அருளைப் பெற முடியும். அத்தகைய மந்திரங்களை ஒரு குருவின் மூலமாகவே பெற வேண்டும் என்பது விதி.
ஒரு குருவின் நாமமே மிகப் பெரிய சக்தி படைத்த மந்திரம்.
மந்திர ஜபம் – அதன் சக்தி
“ஆன்மிகப்பாதையில் செல்பவன்
ஜெபத்தின் மூலமாகவே தனது இலட்சியத்தை அடைகிறான்” – மனு
“கா்மங்களில் ஜெபமே முதலிடம் வகிக்கிறது. அதுவே எல்லாப் பாவங்களையும் போக்கவல்லது” – மகாபாரதம்
“யக்ஞங்களில் நான் ஜப யக்ஞமாக இருக்கிறேன்” – பகவத்கீதையில் கண்ணன்
“எல்லா யக்ஞங்களின் பலன்களை ஜபத்தின் மூலமாகவே ஒரு சாதகன் அடைகிறான்” – தந்திர சாஸ்திரம்
“ஜெபத்தின் மூலமே ஒருவன் தனது இஷ்ட தெய்வத்தை அடைகிறான்” – தந்திர சாஸ்திரம்
“நெருப்பு விறகை எரிப்பது போல ஜெபம் மனிதனின் பாவங்களை எரித்து விடுகிறது. சக்தி வாய்ந்த மருந்தின் பயனை அறியாமல் அதை உபயோகப்படுத்தினாலும் அது நோயைக் குணப்படுத்துகிறது. அது போன்றதே இறைவனின் நாமத்தை ஜெபம் செய்து வருவது” –
Comments
Post a Comment